search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிடிவி தினகரன்"

    • இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும். இல்லாத பட்சத்தில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும்.
    • தமிழகத்தில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி குறித்து பா.ஜ.க.வினரிடம் தான் கேட்க வேண்டும். அ.ம.மு.க. கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அ.ம.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற வதந்திகளுக்கெல்லாம் நான் பதில் கூறமுடியாது. இந்தத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக சில கட்சிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். உறுதியான பின்பு சொல்வது தான் நாகரிகம், அதன் பின் சொல்கிறேன்.

    கூட்டணியிலோ அல்லது தனித்தோ போட்டியிடுவோம். உறுதியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இந்த தேர்தலில் வெற்றி முத்திரை பதிக்கும். ஓ.பி.எஸ்.சுடன் தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம் தாண்டி அரசியல் ரீதியாக நாங்கள் இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்து பயணிக்கிறோம். அது வருங்காலத்தில் எந்த அளவு பலன் தரும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

    அ.தி.மு.க. இந்த தேர்தலில் பெரிதாக சாதித்து விட முடியாது என்பது தான் என்னுடைய கருத்து. கவர்னரின் செயல்பாடு என்பது அந்த பதவியின் மாண்புக்கு இழுக்கு வராமல் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த பதவிக்கு நல்லது, அவர் அதனை பின்பற்றுவார் என்று நம்புகிறோம்.


    அ.தி.மு.க. ஒன்றிணையும் என்று சசிகலா தொடர்ந்து கூறி வருகிறார். பழனிசாமியோடு சேர்ந்து பயணிப்பது என்பது வாய்ப்பில்லை. அ.ம.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், எனக்கும் விருப்பம் இல்லை. அ.தி.மு.க. இணைப்பு குறித்து அவர் எதன் அடிப்படையில் சொல்கிறார் என தெரியவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி முடிவெடுக்கவில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. எங்கள் நிர்வாகிகளும், எனது நண்பர்களும், தொண்டர்களும் நான் போட்டியிட வேண்டும் சொல்கிறார்கள். அதனை நான் பரிசீலிப்பேன் என்று சொல்லி இருக்கிறேன்.

    கூட்டணி என்பது உறுதியான பிறகு தான் நாங்கள் சொல்ல முடியும். இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும். இல்லாத பட்சத்தில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும்

    தமிழகத்தில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எதிரான மனநிலை மக்களுக்கு உள்ளது. அதனை அறுவடை செய்யும் பணியை நாங்கள் மேற்கொள்வோம்.


    ராமர் கோவில் என்பது அத்வானி காலத்தில் இருந்து யாத்திரை நடத்தி அரசியல் நோக்கமாக இருந்தாலும் ஆன்மிக விஷயம். இந்தியாவில் உள்ள அனைவரும் மதங்களை தாண்டி ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதில் விருப்பமாக இருந்தனர், கட்டப்பட்டதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தான் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ராமர் கோவில் விவகாரம் எப்படி இருக்க வேண்டும் என்பது தேர்தலுக்குப் பின்பு தான் தெரியவரும்.

    எந்த கட்சியும் தாங்கள் வளர வேண்டும் என்பதற்காகத்தான் தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. உள்பட அனைத்து கட்சிகளின் பலம் தெரிந்து விடும். பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறதா, இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திரைமறைவில் நடந்துள்ள தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விரைவில் நேரடியாக நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிப்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளவும் பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதையடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றன.

    தி.மு.க.-காங்கிரஸ் ஒரு அணியாக களம் காண உள்ள நிலையில், இந்த கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க காய் நகர்த்தி வருகிறது. இது தொடர்பாக பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் அந்த கட்சி ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

    அதே நேரத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ள அ.தி.மு.க.வை தனிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜனதா கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது என்பது பற்றிய பரபரப்பான தகவலும் வெளியாகி இருக்கின்றன.

    பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, மயிலாடுதுறை, தர்மபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம் ஆகிய 7 தொகுதிகள் ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த தொகுதிகள் பா.ம.க. வலுவாக உள்ள தொகுதிகளாகும்.

    இது தொடர்பாக இறுதி முடிவு விரைவில் எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசே மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்று வெற்றி பெறும் பட்சத்தில் மத்திய மந்திரி பதவியையும் கேட்டு பெற்று விடலாம் என்று பா.ம.க. கணக்கு போட்டுள்ளது.

    இதன்காரணமாகவே பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெறலாம் என்று அந்த கட்சி முடிவு எடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. சேருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போதைய சூழலில் பா.ம.க. கேட்கும் தொகுதிகள் தி.மு.க. கூட்டணியில் அந்த கட்சிக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

    அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் ஏற்பட்டு வரும் விரிசலும் பா.ம.க.வை யோசிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது போன்ற காரணங்களாலேயே பா.ஜனதா கூட்டணியில் சேரும் முடிவை பா.ம.க. எடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.


    இதே போன்று தே.மு.தி.க.வுடனும் தொகுதி பங்கீடு தொடர்பான ரகசிய பேச்சுவார்த்தையை பா.ஜனதா கட்சி நடத்தி முடித்திருப்பதாகவும், கூட்டணியில் 2 தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தே.மு.தி.க.வுக்கு கள்ளக்குறிச்சி தொகுதியை ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னொரு தொகுதி எது என்பது இன்னும் முடிவாகவில்லை. பாராளுமன்ற தேர்தலில் மேல்-சபை எம்.பி. பதவி ஒன்றை கேட்டு பெற வேண்டும் என்பதில் தே.மு.தி.க. நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர். இதுவும் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு மத்திய அரசு சார்பில் அவருக்கு தொடர்ச்சியாக பல்வேறு மரியாதைகள் செய்யப்பட்டுள்ளன.

    பிரதமர் மோடி, விஜயகாந்தை தனது நெருங்கிய நண்பர் என்று புகழ்ந்து பேசி அறிக்கை வெளியிட்டிருந்தார். பத்ம விருதும் விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் மீதும், பிரதமர் மோடி மீதும் தே.மு.தி.க.வினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்று கட்சியை வளர்ப்பதற்கு அது உதவும் என்றும் தே.மு.தி.க.வினர் நம்புகிறார்கள்.

    இது போன்ற காரணங்களால் தே.மு.தி.க.வும், பா.ஜனதா கூட்டணியில் சேரும் முடிவை எடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

    டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வும் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. திருச்சி, சிவகங்கை ஆகிய 2 தொகுதிகள் இந்த கட்சிக்கு ஒதுக்கப்பட உள்ளன.


    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு தேனி தொகுதி ஒதுக்கப்பட உள்ளது. இந்த தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுவார் என்று தெரிகிறது. டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். இருவருக்கும் எடப்பாடி பழனிசாமியே தற்போது பொது எதிரியாவார்.

    பாராளுமன்ற தேர்தலில் இணைந்து செயல்பட போவதாக இருவரும் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். எனவே பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதே இவர்களின் கணக்காக உள்ளது.

    இதற்கு பாரதிய ஜனதா கூட்டணியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் இருவருமே உறுதியாக உள்ளனர்.

    ஜி.கே.வாசனின் த.மா.கா., பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி ஆகியவற்றுக்கும் தலா ஒரு இடங்களை ஒதுக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாரிவேந்தருக்கு பெரம்பலூர் தொகுதியும், ஏ.சி. சண்முகத்துக்கு வேலூர் தொகுதியும், ஜி.கே.வாசனுக்கு தஞ்சை தொகுதியும் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    இப்படி பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 16 தொகுதிகளை ஒதுக்கியது போக மீதமுள்ள 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்துவதோடு அ.தி.மு.க. பக்கம் எந்த கட்சிகளும் சேரவிடாமல் செய்துவிடலாம் என்பதே பாரதிய ஜனதா கட்சி போடும் திட்டமாக உள்ளது.

    திரைமறைவில் நடந்துள்ள இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விரைவில் நேரடியாக நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதுபோன்ற ஒருநிலை எட்டப்பட்டுவிட்டால் அடுத்த மாதம் பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வரும் போது கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றி பிரமாண்ட பிரசாரத்தை தொடங்கவும் பாரதிய ஜனதா கட்சி வியூகம் வகுத்துள்ளது.

    அடுத்த மாதம் தொடக்கத்தில் பாரதிய ஜனதா தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் தமிழகம் வருகிறார்கள். அப்போது தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிப்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளவும் பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு உள்ளது.

    இதன் மூலம் தமிழக தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற அதிரடியாக களம் இறங்கி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

    • கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கும் தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.
    • திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தும் என்ற கர்நாடக மாநில கவர்னரின் குடியரசு தின உரை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கும் தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.

    காவிரியின் குறுக்கே கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருந்தாலும், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    போதிய நீர் இருப்பு இருந்தும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசினாலும், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் உரிய நீரை பெற்றுத்தர முடியாத திமுக அரசினாலும் டெல்டா பகுதி விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

    எனவே, தமிழகத்தை பாலைவனமாக்கும் நோக்கில் கட்டப்படும் மேகதாது அணைக்கான பூர்வாங்கப் பணிகளை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்தி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

    • திண்டிவனம் வந்த டி.டி.வி.தினகரனுக்கு கட்சியின் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    • இந்தியா கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக பிரிந்து வரும் நிலையில் பாராளுமன்ற தேர்தலின்போது அந்தக் கூட்டணியில் மு.க.ஸ்டாலின் மட்டும் தான் இருப்பார்.

    திண்டிவனம்:

    திண்டிவனம்-சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அ.ம.மு.க. கட்சி கொடியேற்று விழா மாவட்ட செயலாளர் முத்து தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

    முன்னதாக திண்டிவனம் வந்த டி.டி.வி.தினகரனுக்கு கட்சியின் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக பிரிந்து வரும் நிலையில் பாராளுமன்ற தேர்தலின்போது அந்தக் கூட்டணியில் மு.க.ஸ்டாலின் மட்டும் தான் இருப்பார்.

    கொடநாடு கொலை வழக்கில் சாட்சியங்களை எதிர்த்தரப்பினர் கலைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் காவல்துறையினர் சிறப்பான முறையில் விசாரணை நடத்தி வருகின்றார்கள் என்றும் அதில் அவர்கள் வெற்றி பெற வேண்டும்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கி வரும் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. சேருவதற்கான வாய்ப்பே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பிரக்ஞானந்தா.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தேசிய செஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரில் நடப்பு உலகச் சாம்பியனான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தியதன் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதன்முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இளம் வயதிலேயே சதுரங்க உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கி அதில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பிரக்ஞானந்தா அவர்கள், உலகளவில் அடுத்தடுத்து பல்வேறு வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • ஓ.பன்னீர்செல்வம் பூரண உடல்நலத்துடன் நீண்டகாலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில், தமிழக முன்னாள் முதல்வர் அன்புச் சகோதரர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஓ.பன்னீர்செல்வம் பூரண உடல்நலத்துடன் நீண்டகாலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.

    • விவசாய பெருங்குடிகளின் நலனை பேணிக் காத்திடவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம்.
    • தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், அன்பும் அமைதியும் நிலவி நலமும் வளமும் பெருக வேண்டும்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலகெங்கும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எத்தனையோ இன்னல்களை சந்தித்த போதிலும் உலகுக்கே உணவளிப்பதை முதன்மை பணியாக செய்து கொண்டிருக்கும் உழவர் பெருமக்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் வாய்ப்பாக பொங்கல் திருநாள் அமைந்திருக்கிறது.

    இயற்கையையும், உழைப்பையும் போற்றும் உழவர் திருநாளில், நிலத்தை உழுவதில் தொடங்கி சாகுபடி செய்யும் வரை இரவு பகல் பாராது அரும்பாடுபட்டு உழைக்கும் விவசாய பெருங்குடிகளின் நலனை பேணிக் காத்திடவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

    அறுவடைத் திருநாளாம் இந்த பொங்கல் திருநாளில் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், அன்பும் அமைதியும் நிலவி நலமும் வளமும் பெருக வேண்டும் என வாழ்த்தி மீண்டும் ஒரு முறை எனது உள்ளம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    • 1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கட்டை வண்டி சின்னத்தில் போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் பெற்றேன்.
    • தேனி மண்ணில் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன்.

    சென்னை:

    தமிழ் திரையுலகில் வில்லன் நடிகராக இருப்பவர் மன்சூர் அலிகான். சமீபத்தில் நடிகை திரிஷா பற்றி இவர் பேசிய கருத்துக்கள் பெரிய சர்ச்சையாக வெடித்தது.

    இதையொட்டி மன்சூர் அலிகான் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் மன்சூர் அலிகான் டி.டி.வி.தினகரனை எதிர்த்து போட்டியிட போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    நான் 1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கட்டை வண்டி சின்னத்தில் போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் பெற்றேன். தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் ஜெயலலிதா பெயரால் வெற்றி பெற்றார்.

    நான் ஜெயலலிதா மரணத்திற்கு வழக்குப் போட்டு எல்லா ஆவணங்களையும் வைத்துள்ளேன். அம்மாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு அவரை கவர்னர் உள்பட யாரையும் பார்க்கவிடாமல் செய்தனர்.

    இதை மக்களிடம் எடுத்து சொல்ல 1999-ம் ஆண்டு நான் தோற்ற அதே பெரிய குளம் தேனி மண்ணில் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன்.

    இது சத்தியம். எந்த கட்சியுடன் கூட்டணி வைத்து வந்தாலும் சரி. இந்தா வர்றேன்டா...

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • காவிரி நீரை உரிய நேரத்தில் பெற முடியாத காரணத்தினால் டெல்டா பகுதிகளைச் சேர்ந்த பெருமளவு விவசாயிகளும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
    • பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இடம்பெறாதது எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்,

    கடந்த ஆண்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மக்கள் மழை, வெள்ளத்தாலும், காவிரி நீரை உரிய நேரத்தில் பெற முடியாத காரணத்தினால் டெல்டா பகுதிகளைச் சேர்ந்த பெருமளவு விவசாயிகளும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.6000 நிவாரணத் தொகை, பலருக்கு கிடைக்கப்பெறவில்லை என்றும், டோக்கனில் தொடங்கி ரொக்கப் பணம் வழங்குவது வரை ஆளுங்கட்சியினரின் தலையீடு இருந்ததால் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த நேரத்தில், தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இடம்பெறாதது எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே, அரசு சார்பாக வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்குவதோடு, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விநியோகம் செய்ய ஒதுக்கப்பட்ட நிவாரணத் தொகை முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே முறையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    • தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் தொண்டர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • விஜயகாந்திற்கு பொது இடத்தில் அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    சென்னை :

    விஜயகாந்த் மறைவையொட்டி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்களை சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆறுதல் கூறினார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சுதீஷின் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்றது.


    இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன், விஜயகாந்தின் மறைவு செய்தி கேட்டு என்னால் அன்றைக்கு வரமுடியாத சூழ்நிலை. இன்றைக்கு பிரேமலதா, சுதீஷ் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து விட்டு விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினேன். விஜயகாந்திற்கு பொது இடத்தில் அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதற்கிடையே தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் தொண்டர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • 6-ந்தேதி - சென்னை அசோக்நகர் எம்.பி.கே. மகால் திருமண மண்டபம்.
    • செய்யூர்- எட்டிப்பட்டு எம்.சந்தோஷ்குமார், என்.பி.கோபு, கே.சூர்யா.

    சென்னை:

    அ.ம.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பணிகளில் விரைந்து செயலாற்றிடும் வகையில், அ.ம.மு.க. சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள்- வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் வருகிற ஜனவரி 3-ந்தேதி முதல் நடைபெறவுள்ளது. இக்கூட்டங்களில் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்று ஆலோசனை வழங்குகிறார்.

    இக்கூட்டத்தில் வருவாய் மாவட்டங்களுக்கு உள்பட்ட தலைமை கழக நிர்வாகிகள், கழக அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் செயலாளர்கள், ஊராட்சி கழக செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும்.

    ஜனவரி 3-ந்தேதி - வேலூர் டோல்கேட் ஆர்.என்.பங்ஷன் பேலஸ் திருமண மண்டபம் (ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள்).

    6-ந்தேதி - சென்னை அசோக்நகர் எம்.பி.கே. மகால் திருமண மண்டபம் (சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள்),

    8-ந்தேதி - தருமபுரி வன்னியர் திருமண மகால் (தருமபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்கள்),

    9-ந்தேதி - ஈரோடு பவானி மெயின் ரோடு ரவி மகால் (திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள்),

    10-ந்தேதி - நாமக்கல் பரமத்தி ரோடு கொங்கு மண்டபம் (நாமக்கல், கரூர் மாவட்டங்கள்).

    பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை விரைந்து செயலாற்றிட அ.ம.மு.க. சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

    திருப்போரூர் - சி,கே.சுடுகாட்டான், எ.குரு என்கிற குருதாஸ், குமரகுரு.

    மதுராந்தகம்- புலவர் வி.தர்மலிங்கம், பாபு என்கிற வி.சீனிவாசன், இ.முனுசாமி.

    செய்யூர்- எட்டிப்பட்டு எம்.சந்தோஷ்குமார், என்.பி.கோபு, கே.சூர்யா.

    இதேபோல் மயிலம், செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம், வானூர், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெருமாளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மற்ற ஊழியர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க வேண்டும்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சென்னை தண்டையார்பேட்டையில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்த விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர் பெருமாள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பெருமாளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மற்ற ஊழியர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்குவதோடு, இது போன்ற ஆபத்து நிறைந்த பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    ×